‘‘இந்த வீர வசனத்தையெல்லாம் கோர்ட்ல போய் பேசச் சொல்லுங்க’’ – அமைச்சர் அதிரடி பதில்

கொரோனா காலக்கட்டத்தில் யாத்திரைக்கு அனுமதி இல்லை எனவும், மீறினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ஊராட்சி அளவிலான 10 கூட்டமைப்புகளின் 96 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,022 உறுப்பினர்களுக்கு,1,97,95,000 ரூபாய் மதிப்பிலான கடன் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சார்பில் 15 செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, கேட்கும் கருவிகள் மற்றும், சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரத்தையும் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் பாஜக வேல் யாத்திரை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், கொரானா காலகட்டத்தில் ஊர்வலம், பேரணி, யாத்திரைக்கு அனுமதி இல்லை எனவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

 முதலமைச்சரின் சுற்றுப்பயணம் குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் செய்தது பற்றி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இந்த வீர வசனத்தையெல்லாம் கோர்ட்ல போய் பேசச் சொல்லுங்க’’ என்று அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக பதிலளித்தார்.

Exit mobile version