மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து அதிமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் காவிரியில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இதனிடையே, மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து, அதிமுக எம்.பிக்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளனர்.