காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைகட்டக் கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர்களுக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேகேதாட்டுவில் அணைகட்டும் கர்நாடகத்தின் திட்டம் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது என்பதால் அதை நிராகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்குக் காவிரி வடிநிலப் பகுதிகளான தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்துக் கர்நாடக அரசுக்கு எதிராகத் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். நீர்மின் திட்டங்களுக்கான வல்லுநர் குழு கர்நாடகத்தின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களிடையே பாயும் ஆற்றில் வடிநிலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவதற்குக் கர்நாடகத்துக்கு எந்த உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கர்நாடகத்தின் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், நீர் மின் திட்டங்களுக்கான வல்லுநர் குழுவுக்கும் அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.