மன்னார்குடியில், அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்த பெண்

மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாக, ஆசை வார்த்தை கூறி 21 பெண்களிடம் சுமார் ரூ.1 கோடி மோசடி செய்த பெண்ணின் வீட்டை பாதிக்கப்பட்ட பெண்கள் அடித்து உடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் மேகலாதேவி வயது 35. இவரின் கணவர் ஜெயபிரகாஷ். இருவரும் துணி வியாபாரம் செய்துவந்தாக கூறப்படுகிறது. இதில் மேகலா தேவி மன்னார்குடி பகுதிகளில் உள்ள நெடுவாக்கோட்டை, பரவாக்கோட்டை, மேல வாசல், அஷேசம், பூக்கொல்லை ரோடு, கீழப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக துணி வியாபரம் செய்த போது பல பெண்களுடன் நெருங்கி பழகி உள்ளார் .

இந்நிலையில் மேகலாதேவி தன்னிடம் நெருங்கி பழகிய பெண்களிடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தானும் தனது கணவரும் சேர்ந்து பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் என்னிடம் நீங்கள் பணம் கொடுத்தால் அதற்கு அதிகளவில் வட்டி கிடைக்கும் எனவும் அதேபோல், மாதா மாதம் குறித்த நாளில் கொடுக்கும் பணத்திற்கு உரிய வட்டியை தான் கொடுத்துவிடுவதாகவும் பெண்களுக்கு ஆசை காட்டியுள்ளார். ஒருவரிடம் பணம் பெற்ற செய்தி அடுத்த பெண்களுக்கு தொியாமல் மேகலா தேவி பார்த்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டும் வட்டி பணம் கொடுத்த மேகலாதேவி பலருக்கு பல மாதங்களாக வட்டி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பல பெண்கள் வட்டி மற்றும் தாங்கள் கொடுத்த பணத்தை உடனே கொடுக்குமாறு மேகலாதேவிக்கு நெருக்கடி கொடுத்தனர். நெருக்கடி அதிகமானதால் சுதாரித்துக்கொண்ட மேகலாதேவி அவரது கணவர் ஜெயப்ரகாஷுடன் தலைமறைவாகிவிட்டார்.

இதனையறிந்த பணம் கொடுத்த பெண்கள் மேகலாதேவி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதானால் அதிர்ச்சியடைந்த பெண்களில் ஒரு பிரிவினர் மன்னார்குடியில் மேகலாதேவி, வீட்டின் கதவை உடைத்து ஜன்னல்களில் உள்ள கண்ணடிகளை உடைத்து வீட்டை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களை சமாதான படுத்த முயற்சியில் ஈடுபட்டனர்.

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 21 பெண்களிடம் சுமார் ரூ1 கோடி வரை மோசடி செய்த பெண் தனது கணவருடன் தலைமறைவான சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version