தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்த சைக்கோ கொலைக்காரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
முத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் – ரேவதி தம்பதியின் மகனான 6 வயது சிறுவன் காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அருள்ராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அருள்ராஜை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அருள்ராஜ் சிறுவனை அடித்துக் கொலை செய்ததாகவும், உடலை எங்கு வீசினேன் என்பது தெரியவில்லை எனவும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.