மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். தன்னுடைய 13-ம் வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். 18-ம் வயதில் பள்ளிப்படிப்பை முடிந்த காந்தி பாரிஸ்டர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பியதும் மும்பையில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலையிருப்பதை அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனத்தின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவிற்கு பயணமானார். அந்தசமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியின் நிறவெறியும் இனப்பாகுபாடும் அதிகம் இருந்தது.
தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குதான் கரம்சிங்காந்தி மகாத்மாவாக மாறப்போகிறார் என்பது அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. ஒருநாள் புகைவண்டி பயணத்தில் முதல்வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தியினை வெள்ளையர் இல்லை என்ற காரணத்தினால், ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் ரெயில் நிலையத்தில் தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பவத்தின் மூலம் தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் துன்பத்தையும் காந்தி நன்குணர்ந்தார். இதனை எதிர்த்து முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்து தென்னாப்பிரிக்கவாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றிபெற்று தாயகம் திரும்பினார் காந்தி.
தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. இதனால் 1921-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். மார்ச் 2, 1930 அன்று குஜராத் மாநிலத்தின் தண்டியில் உப்பு சத்தியாகிரகத்தை காந்தி நடத்தினார். இந்தியாவின் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களும் இதேபோல் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். உப்பு சத்தியாகிரகம் சுதந்திர வரலாற்றில் முக்கிய திருப்புமுனை என்றே கூறலாம்.
1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தினார்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் பிரத்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காந்தியை நாதுராம் கோட்சேவின் துப்பாக்கி குண்டு மாகாத்மாவின் உயிரை குடித்தது. இந்த நிகழ்வு இந்தியாவை மட்டும் அல்ல உலக நாடுகளையே சோகத்தில் ஆழ்த்தியது.
பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய காந்தியின் வாழ்க்கை, சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாத சுவடு என்பதுதான் நிதர்சனமான உண்மை.