சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி மாறன் சகோதரர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனத்தின் அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக வழங்கினார். இதனால் அரசுக்கு 1 கோடியே 78 லட்சத்து 71ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி மாதம் குற்றச்சாட்டு பதிவு நடைபெற்றது. இதனிடையே சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாறன் சகோதரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேற்கொண்டார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.