மாறன் சகோதரர்களுக்கு முற்றும் நெருக்கடி : சூடு பிடிக்கும் சாட்சியங்களின் விசாரணை

மாறன் சகோதரர்களுக்கு எதிரான பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில் முக்கிய சாட்சியங்கள் அடுத்தடுத்து விசாரிக்கப்படுவது மாறன் சகோதரர்களுக்கு கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தயாநிதி மாறனின் எம்.பி. பதவியைக் கேள்விக்குள்ளாக்கி வரும் பி.எஸ்.என்.எல். வழக்கின் தற்போதைய நிலை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கடந்த 2004 முதல் 2007வரையிலான ஆண்டுகளில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைககாட்சிக்கு, பி.எஸ்.என்.எல் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக வழங்கினார். இது மாபெரும் விதிமீறல் என்பதோடு அரசுக்கு இதனால் 1 கோடியே 78லட்சம் ரூபாய் இழப்பும் ஏற்பட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல் முறைகேடு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூட்டு சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அந்நிலையில், சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்ததோடு, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்குமாறு வலியுறுத்தியது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை விசாரணை நீதிமன்றமே அவர்களுக்கு வாரண்ட் பிறப்பித்து, அவர்களை சிறையில் அடைத்து வழக்கு விசாரணையை தொடரலாம் எனவும் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட ரவி, கண்ணன், கௌதமன் ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மூன்றுமே ஒருகுரலில் கட்டளையிட்ட நிலையில், பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு இவ்வாண்டு ஏப்ரல் 25ஆம் தேதியன்று 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

4 மாதங்களில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற நிலையில், சாட்சிகள் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டனர். முதல்நாளில் சிபிஐ தரப்பில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் செல்வம் ஆஜராகி அரசு தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக பி.எஸ்.என்.எல்.லின் பெண் அதிகாரி சரஸ்வதி இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அவரது சாட்சியம் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் நாளைய மறுநாளான ஜூலை 3 அன்று அவர் மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளார்.

சரஸ்வதியின் சாட்சியத்திற்கு அடுத்து, முன்னர் சன் தொலைக்காட்சியிலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலும், திமுகவிலும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களின் சாட்சியங்கள் பெறப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம்பெற்று உள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படியாகச் சாட்சியங்கள் பெறப்பட்டால் பி.எஸ்.என்.எல். வழக்கு விரைவில் முடிவுக்கு வரும், அப்போது மாறன் சகோதரர்கள் சிறை தண்டனை பெறுவார்கள் என்பதோடு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் தற்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தயாநிதி மாறன் அந்தப் பதவியையும் இழப்பார். இது திமுகவில் உட்கட்சிக் குழப்பங்களைத் தோற்றுவிக்கும்.

இதனால் பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கின் தீர்ப்பு நெருங்குவது மாறன் சகோதரர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திமுக கட்சிக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்து வருகின்றது.

Exit mobile version