விழுப்புரம் அடுத்த மேல்பாதி பகுதியில், இளைஞர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மேல்பாதி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதே பகுதியை சேர்ந்த கனகசபாபதியை பிடித்து விசாரித்தனர். அப்போது, தமிழ்ச்செல்வனை 7 பேர் கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவத்தன்று லாரி ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் நண்பர்கள் வெங்கடேசன், சண்முகம் ஆகியோருடன் மது அருந்திவிட்டு, சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். அங்கு கனகசபாபதி உட்பட மேலும் இருவர் உணவு சாப்பிட்டு இருந்தனர். அப்போது, ஆம்லெட்டை முதலில் ஆர்டர் செய்த கனகசபாபதிக்கு கொடுக்காமல், தமிழ்ச்செல்வனுக்கு ஹோட்டல் ஊழியர் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கனகசபாபதி தகராறு செய்ய, தமிழ்ச்செல்வனின் நண்பர் வெங்கடேசனுடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மோதல் உச்சம் அடைய, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மூவர் கனகசபாபதியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து கனகசபாபதி தமது தாய்க்கு செல்போனில் தகவல் தெரிவித்ததால், அங்கு வந்த அவரது உறவினர்கள் தமிழ்ச்செல்வனையும், அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். மேலும், ஹோட்டல் மீதும் தாக்குதல் நடத்தினர்.இதனால் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பினர். சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற தமிழ்ச்செல்வனை வழிமறித்து, கத்தியால் கழுத்தை அறுத்தும், தலையில் கல்லை போட்டும், கனகசபாபதியின் உறவினர்கள் கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான கனகசபாபதி, அவரது தாய் செல்வி உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.