தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து பணியாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ராஜபக்சவும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச 4 நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற ராஜபக்சவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று, ராஜபக்சவை வரவேற்றார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இருநாட்டு அதிகாரிகளின் உயர்மட்டக்குழு கூட்டம் டெல்லி ஆந்திர பவனில் நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, ராணுவ விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியா – இலங்கை இடையேயான வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ராஜபக்சேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய பிரதமர் மோடி, இலங்கையில் இருநாடுகளும் கூட்டாக பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், பரஸ்பரம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் பேசிய ராஜபக்ச, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றும் என்றும், இலங்கையில் வீட்டு வசதி திட்டத்துக்கு இந்தியா உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.