திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்ததாக லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மடத்தூரில் சில தினங்களாக லாரிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து இத்தகைய கழிவுகளை ஏற்றிவந்த லாரி ஒன்றை அவர்கள் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த கழிவுகள், நாமக்கல்லை சேர்ந்த அரசு காகித தொழிற்சாலை கழிவுகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கொடுத்த உறுதியை அடுத்து பொதுமக்கள் லாரியை விடுவித்தனர்.