கேரள மாநிலம் மூணாறில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆரம்ப சுகாதாரம் மையம் செல்லும் சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மூணாறு அருகே தேவிகுளம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்லும் இந்த பாதை மூணாறில் கடந்த வருடம் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. பின்னர் சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சாலையை சரி செய்யும் பணி துவங்கிய நிலையில், மீண்டும் பெய்த மழையால் மண்சரிவு எற்பட்டது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானதையடுத்து, துண்டிக்கபட்ட சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.