ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபில் தொடரின் 32-வது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து மயங்க்அகர்வால் 26 ரன்னில் ஆட்டமிழக்க டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ராஜஸ்தானின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தார்.

மில்லர் 40 ரன்களிலும், ராகுல் 52 ரன்களிலும் ஆட்டமிழக்க தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர், ஜோஸ் பட்லர் 23 ரன்னிலும், அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி 50 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 10 புள்ளிகளை பெற்ற பஞ்சாப் 4-வது இடத்திற்கு முன்னேறியது.

Exit mobile version