ஆட்கொல்லி மக்னா யானையைப் பிடிக்க கும்கி யானைகள் தேடுதல் வேட்டை!

தேனி மாவட்டத்தை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி மக்னா யானையைப் பிடிக்க, கும்கி யானைகள் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளன.

தேனி மாவட்டம் தேவாரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி யானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தாக்கியதில் இதுவரை 9 பேர் உயிரை இழக்க நேரிட்டுள்ளது. எனவே, அச்சுறுத்தும் அந்த மக்னா யானையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மக்னா யானையை அடக்க பொள்ளாச்சியின் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து பயிற்சி எடுக்கப்பட்ட விஜய், வாசிம் என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.

தேவாரம் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட இந்த கும்கி யானைகள் இன்று காலை முதல் தேடுதல் முயற்சியைத் தொடங்கின. கேமிராவில் பதிவான மக்னா யானையின் நடமாட்டத்தை வைத்து கும்கி யானைகள் மற்றும் சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version