ஜாலியாக வலம் வரும் போலி நடத்துநர்! உஷாரா இருங்க மக்களே!

அரசு போக்குவரத்து கழக சீருடை அணிந்து, பேருந்தில் ஏறி போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். திரைப்பட பாணியில் நடந்துள்ள மோசடி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில், நடத்துனர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் வழக்கம்போல டிக்கெட்டுகளை வழங்கி, பணம் வசூலித்துள்ளார். தேநீர் அருந்தச் சென்றிருந்த அப்பேருந்தின் கண்டெக்டரும், டிரைவரும் பேருந்துக்குள் ஏறும்போது, ஏற்கெனவே அங்கு ஒரு நபர் டிக்கெட் வசூலித்து வருவதைக் கண்டு அதிர்ச்சியாகினர். ஆனால், அசல் கண்டெக்டரைக் கண்டும் கூட அசராத அந்த நபர் தொடர்ந்து டிக்கெட் விநியோகித்து பணம் வசூலிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.

சுதாரித்த ஒரிஜினல்கள், படக்கென அந்த நபரை மடக்கிப் பிடித்து கேள்வி எழுப்பினர். முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டிய நபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் போக்குவரத்து ஊழியர்கள். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் முழித்த பயணிகள், விஷயம் தெரிந்ததும் பதறினர். “ஆள் அச்சு அசலா கண்டெக்டர் மாதிரியே இருந்ததால நம்பிட்டோம் சார்” என பரிதாபமாக முழித்துள்ளனர்.

போலீஸார் விசாரணையில் அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த வேடியப்பன் என்பது தெரியவந்தது. வயிற்றுப் பிழைப்புக்கு வழி இல்லாமல், கண்டெக்டர் வேஷம் போட்டு பிழைக்கலாம் என முடிவு செய்ததாகவும், முதல் அட்டெம்ப்டிலேயே சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் வேடியப்பன். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்து பயணிகளிடம் ஒப்படைத்தனர்.

திரைப்பட பாணியில் போலி கண்டெக்டர் வேஷமிட்டு பயணிகளிடம் போலி டிக்கெட் கொடுத்து பணம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version