வழிப்பறியில் குதித்த ஆட்டோ டிரைவர். அலறிய கேரள இளைஞர்கள் !

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை தாலுகா முக்குடில் இடப்பந்துருதில் பகுதியைச் சேர்ந்தவர் அருண் திவாகரன். இவர் ராஜாக்காடு பகுதியில் சி.சி.டி.வி. கேமரா மற்றும் கம்ப்யூட்டர் விற்பனை கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்க தன் நண்பர் சைலத் என்பவருடன் தேனிக்கு வந்துள்ளார்.

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் தனியார் மில் பகுதி ஒன்றில் அவர்களது கார் டயர் பஞ்சரானது. இருவரும் உதவிக்காக எதிர்பார்த்திருந்த போது அப்பகுதியில் ஒரு ஆட்டோ வந்துள்ளது. அதை நிறுத்தி டயர் பஞ்சர் ஒட்ட உதவி கேட்டுள்ளனர். ஆட்டோ டிரைவரும் உதவி செய்வதாக கூறி இருவரையும் தன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். ஆட்டோவை ஓட்டியவாரே யாரோ ஒருவருக்கு போன் செய்து தகவல் கொடுக்க அந்த நபர் பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் அருகே ஆட்டோவில் ஏறிக் கொண்டார்.

இவர் என் நண்பர் என கேரள இளைஞர்களிடம் அறிமுகப்படுத்திய ஆட்டோ டிரைவர் , பஞ்சர் கடையை தேடுவதாக கூறி ஆட்டோவிலேயே கோடாங்கிபட்டிக்கு கூட்டிச் சென்றார்.அங்கு இருள் சூழ்ந்திருந்த ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தியபின்தான் கேரள இளைஞர்களுக்கு, தாங்கள் கொடூரர்களிடம் சிக்கியுள்ளோம் என்பதே புரிந்தது. அருண்திவாகரன், சைலத் ஆகிய இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவரும்,அவரது நண்பரும் அவர்களிடம் 3,500 ரூபாய் பணம், ஒரு வாட்ச், 3 செல்போன்கள் என 65 ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறித்தனர்.

அப்போது சைலத்திடம் ஏ.டி.எம். கார்டு இருப்பதை பார்த்த கொடூரர்கள், அருண் திவாகரனை ஆட்டோ டிரைவரின் பொறுப்பில்
ஒப்படைத்து விட்டு மற்றொரு நபர், சைலத்தை கத்தி முனையில் ஏ.டி.எம். மையத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் அழுதுகொண்டே இருப்பதை ஏ.டி.எம். மையம் அருகில் நின்று கொண்டிருந்த முதியவர் பார்த்து விசாரித்தார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த நபர், சைலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி ஆட்டோவில் ஏறினார். பின்னர், ஆட்டோவில் அருண்திவாகரனை மட்டும் கடத்திச் சென்ற இருவரும், அவரை பூதிப்புரம் கெட்டக்குடி ஆற்றுப் பாலம் அருகே கல்லால் தலையில் பலமாக தாக்கிவிட்டு ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றனர்.

இதற்கிடையில் சைலத் அப்பகுதி மக்களின் உதவியுடன் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கவுதம் கம்பீர் , மற்றும் கதிரேசனும்தான் இந்த சம்பவத்தை செய்தனர் என தெரியவந்தது. இதில் கவுதம் கம்பீர் ஏற்கனவே ஒரு முறை தண்டனை பெற்று சிறார் சிறையில் இருந்தவர். அவர்கள் இருவரையும் தேடிப்பிடித்த போலீசார் அருண்திவாகரனை எங்கே விட்டீர்கள் என விசாரித்தனர்.

அவர்கள் கூறிய கெட்டக்குடி ஆற்றுப் பாலம் சென்று பார்த்த போது அங்கே அவரை காணவில்லை.ஆனால் அருண்திவாகரனோ பயத்தில் பூதிப்புரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு எதிரில் இருக்கும் டீக்கடையில் இரவு முழுவதும் மறைந்திருந்துள்ளார். அப்பகுதியில் போலீஸ் வாகனம் வந்தவுடன் அவரே போலீசாரிடம் வந்து சேர்ந்தார்.

கவுதம் கம்பீர், மற்றும் கதிரேசனை கைது செய்த போலீசார் கேரள இளைஞர்களிடம் கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version