பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், பங்கேற்க போவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசர்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சார்பில் 79 எம்.எல்.ஏ க்கள் இருந்தலும் 37 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குமாரசாமி முதல்வராக உள்ளார். அதே நேரம் 225 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் 105 எம்.எல்.ஏக்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கடுமையான பிணக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
மக்களவை தேர்தலில் பாஜக இமாலய வெற்றியை ஈட்டியுள்ள நிலையில் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தால் போவீர்களா? என முதலமைச்சர் குமாரசாமியிடம் கேட்கப்பட்டபோது அவர் அதனை ஆமோதித்து பேசியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரை அதிர வைத்துள்ளது. காங்கிரசை கழட்டி விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள குமாரசாமி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.