மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், மகத்தான சாதனை ஒன்றை தன்வசப்பத்தி உள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் குவித்தது. இதனால் 388 ரன்களை இலக்காக கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட நிலையில், ஷை ஹோப் 78 ரன்களிலும், அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 75 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களம் இறங்கிய வீரர்கள் கணிசமான ரன்களை குவித்தனர். இறுதி கட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் சரிவுக்குள்ளான மேற்கிந்திய தீவுகள் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்ட நிலையில், அந்த அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன.
இந்நிலையில், 25 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நேற்றைய போட்டியில் மகத்தான சாதனை ஒன்றை தன்வசப்படுத்தி உள்ளார். 33-வது ஓவரின்போது தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை படைத்தார். ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் பார்க்கையில், பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், மலிங்கா, சமிந்தா வாஸ், டிரென்ட் பவுல்ட் ஒன்றுக்கு மேற்பட்ட ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். தற்போது, இந்த அரிய பட்டியலில் குல்தீப் யாதவும் இணைந்துள்ளார். இலங்கை வீரர் மலிங்கா மட்டும் 3 முறை ஹாட்ரிக் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.