இது மாதிரி நான் எங்கும் பார்த்ததில்லை: நடுவரின் செயலை விமர்சித்த விராட் கோலி

 

சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்ப்ரீஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷை ஹோப், ஹெட்மயர் ஆகியோர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 139 ரன்னில் ஆட்டமிழக்க, ஷை ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். ஹோப் 102 ரன்களும் பூரன் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹெட்மயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. அப்போது, 48-வது ஓவரின் போது ரவீந்திர ஜடேஜா ரன்அவுட் செய்யப்பட்டார். முன்னதாக, களத்தில் இருந்த நடுவர் ஜடேஜா ரன் அவுட்டை சரியாக கவனிக்கவில்லை. இதையடுத்து, மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட ரீப்ளேயில் ஜடேஜா அவுட் என தெரிய வந்தது. இதனையடுத்து எதிரணி கேப்டன் பொல்லார்ட் நடுவரிடம் சென்று அப்பீல் செய்தார். கள நடுவர் மூன்றாவது நடுவரோடு ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, ரவீந்திர ஜடேஜாவுக்கு ரன்அவுட் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், நடுவரின் தாமதமான ஆலோசனை முடிவை கேப்டன் விராட் கோலி கடுமையாக சாடியுள்ளார். ரவீந்திர ஜடேஜாவுக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதத்தை, தான் இதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை. போட்டியில் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை, மைதானத்திற்கு வெளியே உள்ளவர்கள் தீர்மானிக்கக் கூடாது என்று விமர்சித்தார்.

Exit mobile version