ராஜஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய கொல்கத்தா – 3 வது இடத்திற்கு தள்ளப்பட்ட ராஜஸ்தான்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

ஐ.பி.எல் 2020 கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக கொல்கத்தா அணியின், சுப்மன் கில் மற்றும் நரேன் ஆகியோர் களமிறங்கினர். சுப்மன் கில், மோர்கனைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது கொல்கத்தா அணி. அதிகபட்சமாக சுப்மன் கில் 47 ரன்களும், மோர்கன் 34 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில், ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், ராஜ்புட், உனட்கட், டாம் கரன், ராகுல் திவாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லரும், ஸ்மித்தும் களமிறங்கினர். முதல் விக்கெட்டை 3 ரன்களில் ஸ்மித் பறிகொடுக்க, அடுத்த வீரர்கள் மைதானத்திற்குள் வருவதும், அவுட்டாகி பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். பட்லர் 21 ரன்களில் அவுட்டாக மீண்டும் அணிவகுப்பு தொடங்கியது. திவாட்டியா 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். அணியின் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டாம் கரன் மட்டும் கடைசி வரை போராடினார். 36 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 54 ரன்கள் எடுத்தார். டாம் கரணின் அரைசதம் காரணமாக ராஜஸ்தன் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. எனினும், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது. டாம் கரண் 54 ரன்களுடனும், அங்கிட் ராஜ்புட் 7 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதனையடுத்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

கொல்கத்தா அணி தரப்பில் சிவம், கம்லேஷ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நரேன், கம்மின்ஸ், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சிவம் மவி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 13வது போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version