கேரள அரசுப்பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரள அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்19 பேர்  உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற டைல்ஸ் கற்கள் ஏற்றிய கண்டெய்னர் லாரியும், எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 12 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சேலம் ஓமலூர் அருகே, நேபாளத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த மினி பேருந்து மீது, தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில், 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நேபாள சுற்றுலாப் பயணிகளுடன் மினிபேருந்து கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் திரும்பி கொண்டிருந்தது. ஓய்வு எடுப்பதற்காக பெங்களூர் சாலையில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல, ஓமலூரை அடுத்த சின்னநடுப்பட்டி என்ற இடத்தில் மினி பேருந்து திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து, மினிபேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
 

Exit mobile version