கேரளாவில் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்ற வழக்கில், கணவர் குற்றவாளி என்று கொல்லம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளா பத்தனம்திட்டா அரூர் பகுதியை சேர்ந்த சூரஜ் என்பவர், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த உத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
திருமணத்தின்போது 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் மற்றும் சூரஜின் தங்கையின் படிப்பிற்கான முழுச் செலவு, அவரது தந்தை பிழைப்பின் பொருட்டு ஆட்டோ ஒன்று என்று வரதட்சணையாக வாரிக் கொட்டியிருக்கிறார் உத்ராவின் தந்தை விஜயசேனன்.
இத்தனை சொத்துக்களையும் அடைந்த சூரஜ் குடும்பத்தினர், மீண்டும் வரதட்சணை கேட்டு உத்ராவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மனைவிக்கு உடல் ரீதியான குறைப்பாடு இருந்தததால் கடந்தாண்டு பிப்ரவரி 15ம் தேதி பாம்பை கடிக்கவிட்டு உத்ராவை கொலை முயற்சி செய்தனர்.
இதில், அவர் தப்பித்ததால் மீண்டும் மே 7ம் தேதி பாம்பை ஏவிவிட்டு மனைவியை சூரஜ் கொன்றார்.
இதையடுத்து நடந்த போலீசின் விசாரணையின்போது, சூரஜின் திட்டமும் ஏற்கனவே பாம்பை ஏவி விட்டு உத்ராவை கடிக்க விட்ட சம்பவம் உட்பட அனைத்தையும் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் நடந்ததை உறுதிப்படுத்த மாறுபட்ட முறையில் கட்டிலில் படுத்திருந்த பெண்ணை பாம்பு எவ்வாறு கடித்திருக்கும் என்பதை சோதனை செய்து பார்க்கும் முயற்சியும் நடைபெற்றது.
இதையடுத்து சூரஜூக்கு எதிராக கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் கணவர் சூரஜ் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் அவருக்கான தண்டனை விபரம் வரும் 13ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.