பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்துவாராவுக்கும் பாகிஸ்தானின் கர்த்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவாராவுக்கும் இடையே சீக்கிய பக்தர்கள் சென்று வருவதற்காகத் தனிச் சாலை, பொதுவான சோதனைச் சாவடி ஆகியவை இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக சீக்கிய பக்தர்கள் 500 பேர் கொண்ட குழுவினர் முதன்முறையாக இன்று புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், அவர் கணவர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் குழுவில் செல்கின்றனர். இந்தப் புனிதப் பயண வழித்தடத்தின் திறப்பு விழா குருதாஸ்பூரில் நடைபெற்றது. விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வழித்தடம், பொதுவான சோதனைச் சாவடி திறப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
கர்த்தார்பூர் திட்டத்தை நிறைவேற்றப் பாடுபட்ட பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அகாலி தளத் தலைவர் சுக்பீர் பாதல் ஆகியோரைப் பாராட்டினார். சீக்கியர்களின் மத உணர்வை மதித்து திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் மோடி நன்றி தெரிவித்தார்.