வரும் 16ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும்: ஆட்சியர்

காஞ்சிபுரத்தில் 44-வது நாளாக காட்சி அளிக்கும் அத்திவரதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் ஆதி அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை காண வந்த வண்ணம் உள்ளனர்.

வரும் 16ம் தேதி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிய தொடங்கியுள்ளனர். இதனிடையே பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரும் 16ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த மூன்று இடங்களில் அடிப்படை வசதிகளோடு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version