காந்தியின் படுகொலையை இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், இந்தியாவில் முதல் தீவிரவாதம் காந்தியின் படுகொலை என்றும், அதை தொடங்கி வைத்தவர் இந்துவான நாதுராம் கோட்சே என்றும் பேசினார். இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள அப்பகுதியில், கமல் இவ்வாறு பேசியது, அவர்களின் வாக்குகளை வாங்குவதற்காக என்று கூறி, அவருடைய பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் நடுவே நின்றுகொண்டு, அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக, கமல் இவ்வாறு காந்தியின் படுகொலையை நினைவுகூர்ந்து பேசியது கண்டனத்திற்குரியது என்றும், அவருடைய பேச்சு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், காந்தி மிகவும் ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர் என்றும், கமல் தன் வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடிக்காதவர் என்பதால், காந்தியின் பேரன் என்று சொல்லும் தகுதி அவருக்கு இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.