அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. முதல்நாள் ஏலத்தில் 62 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு அதிகபடியாக க்ளென் மேக்ஸ்வெல் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கும், கிறிஸ் மோரீஸ் 10 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணிக்கும் ஏலம் போயுள்ளனர்.
இதேபோல், 8 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ஷெல்டர் காட்ரெல் பஞ்சாப் அணிக்கும், நாதன் கால்டர் 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்கும் ஏலம் போயுள்ளனர். இந்திய தொடரின் போது கவனம் ஈர்த்த ஹெட்மயரை 7 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை 6 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும், ஆல் ரவுண்டரான சாம் குர்ரனை 5 கோடியே 50 லட்ச ரூபாய்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏலத்தில் இதுவரை 62 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், டிம் சவுதி, மார்ட்டின் குப்தில், இவின் லீவிஸ், யூசுப் பதான், காலின் முன்ரோ, ஜேசன் ஹோல்டர், காலின் இங்கிராம், ஷை ஹோப், லெண்டி சிம்மோன்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 62 வீரர்கள் வாங்கப்பட்டனர். இதற்கு செலவிடப்பட்ட தொகை ரூ.140.3 கோடியாகும்.