ஐபிஎல் கிரிக்கெட்: டேவிட் வார்னர் அதிரடி; ஹைதராபாத் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், விருதிமான் சஹா ஆகியோர் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். சகா 28 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு களம் இறங்கிய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்த ஹைதராபாத் 212 ரன்கள் குவித்தது.

213 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து களம் இறங்கிய மயங்க் அகர்வால் 27 ரன்களிலும், நிகோல்ஸ் பூரன் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் மட்டும் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியில் கலீல் அகமது, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால், 45 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கேள்வி குறியாகியுள்ளது.

Exit mobile version