ஐபிஎல் தொடரின், கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக, சுப்மன் கில் மற்றும் கிரிஸ் லின் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 49 ரன்களை எடுத்திருந்த போது சுப்மன் கில் 9 ரன்னில் ஆவுட்டனார். பின்னர் களமிறங்கிய ராபின் உத்தப்பா நிதான ரன்குவிப்பில் ஈடுபட்டார். கிரிஸ் லின் 29 பந்துகளில் 41 ரன்களை எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குயிண்டன் டி காக் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்து 30 ரன்களை எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் இணைந்து இருவரும் பொறுமையான ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரும் அவுட்டாகாமல் கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கேப்டன் ரோகித் ஷர்மா 48 பந்துகளில் 55 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 46 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். இதனையடுத்து 16.1 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றது. ஆட்ட நாயகனாக மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். பிளே ஆப் சுற்றில் மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளது. இதில் குவாலிபயர் 1 சுற்றில் மும்பை அணியும், சென்னை அணியும் வரும் 7 ஆம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன.