ஐபிஎல் 2019: கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இருப்பிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 159 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதரபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதத்தை கடந்தனர். வார்னர் 38 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆந்த்ரே ரசல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய பேர்ஸ்டோ 43 பந்துகளில் 80 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 15 ஓவர் முடிவில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

Exit mobile version