ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்ததையடுத்து மற்றொரு மிகப்பெரிய தாக்குதலை இந்தியாவில் மீண்டும் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலை அடுத்து கடந்த பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் சிலர், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைமையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்த உரையாடல்களை உளவுத்துறை இடைமறித்து கேட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்துள்ளதால், அடுத்த கட்டமாக இந்தியாவில் மீண்டும் பெரிய அளவிலான வெடிகுண்டு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது இந்த உரையாடலில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் முந்தைய தாக்குதலைவிட அதிகளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கடந்த 19-ம் தேதி உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் உள்ளிட்ட 3 இடங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.