உலக கோப்பையில் இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம்: தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிக்குமா?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைய உள்ள நிலையில், இந்திய அணி இலங்கையை இன்று எதிர்கொள்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ளன. 44-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியை இன்று எதிர்கொள்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, இங்கிலாந்துடன் மட்டுமே தோல்வியடைந்த நிலையில், 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.

அதேபோல், 8 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 3 வெற்றி 3 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், 2 போட்டி மழையால் ரத்தானது. அரையிறுதி வாய்ப்பை இழந்த அந்த அணி ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டும். இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்க இந்தியா தீவிரம் காட்டும். லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

இதேபோல், மான்செஸ்டரில் நடைபெறும் 45-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 8 போட்டியில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 7 வெற்றியுடன் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில், இந்த போட்டியிலும் வென்று முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.

அதேபோல், தென் ஆப்பிரிக்கா அணி 8 போட்டியில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இன்று நடைபெறும் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது. இப்போட்டி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version