இலங்கையின் மேம்பாட்டிற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்: பிரதமர் மோடி

பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துக்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கே வந்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். இதனையடுத்து அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சி தலைவருமான ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இதனிடையே அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஈஸ்டர் தினத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தநிலையில் இலங்கை பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் மேம்பாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இருநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க உறுதிபூண்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நாடு திரும்பி திருமலை திருப்பதி கோயிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் கோயிலில் மோடி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் பிரதமருடன் சென்று வழிபாடு செய்தார். இந்த நிகழ்வின் போது, பிரதமர் மோடிக்கு திருப்பதி கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Exit mobile version