மே.தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் – ரோகித் சர்மா அதிரடியால் தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் தவான், இரண்டு ஓவர்கள் வரை பொறுமையாக ஆடினாலும், பின்னர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 14-வது ஓவரில், 43 ரன்களை எடுத்திருந்த நிலையில், தவான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பவுலர்களை கதறச்செய்த ரோகித் சர்மா, 61 பந்துகளில் 111 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பண்ட்டை தொடர்ந்து வந்த கே.எல். ராகுல் 14 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில், இந்தியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு, 195 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹோப் 6 ரன்களிலும், ஹெட்மையர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த பிராவோ 23 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களையே எடுத்தது. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

Exit mobile version