சீன இராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய இராணுவம் – அமைச்சர் இராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இராணுவத் தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, படைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

லடாக் எல்லைப் பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள சுமர் – டெம்சோக் பகுதியில் ஆயுதங்களுடன் குவிந்துள்ள சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில், D 90, D 72 பீரங்கிகள் மற்றும் BMP-2 வாகனங்களை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது.

துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் D-90 பீரங்கி, ஒரு நிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் கொண்டது. ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறனுடைய 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கிகள், ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். இந்த ரக பீரங்கிகளை, -40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் இயக்கமுடியும். குளிர்காலத்தில், லடாக்கின் கிழக்குப் பகுதியில் வெப்பநிலை -35 டிகிரிக்குக் கீழேச் செல்வதுடன், அதிகளவு பனிக்காற்றும் வீசும் எனக்கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பேசியுள்ள ராணுவ மேஜர் ஜெனரல் அர்விந்த் கபூர், பீரங்கிகள் மற்றும் கனரக துப்பாக்கிகளை இந்த பகுதியில் பராமரிப்பது என்பது சவாலான விஷயம் என்றும், குளிர்காலத்தில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வீரர்களுக்கு ரேஷன் பொருட்கள், உடைகள், வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சீன ராணுவத்தின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும், இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்றும், சீனாவின் ராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய ராணுவம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லடாக் எல்லையில் சீன ராணுவம் முன்னேறி வந்தால், சுடத் தயங்க மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

Exit mobile version