மருந்துப்பொருட்களில் சீனாவை மட்டும் நம்பியிருப்பதா? – உயர்நீதிமன்றம் வேதனை!

மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளது குறித்து வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்நாட்டு ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், புதிய மருத்துகள் கண்டுபிடிக்க அரசு முறையாக ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மனுதாரரின் நிறுவனத்துக்கு நிதியுதவி மற்றும் பல்வேறு உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்க மத்திய அரசின் நிதித்துறை மற்றும் மருந்து துறையின் இணை செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டார்.

மருத்துவத் துறை ஆய்வுகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், உரிய முதலீடும், ஊக்கமும் அளிக்காத காரணத்தால், பல நிபுணர்கள், வெளிநாட்டு சென்று விடுவதாக குறிப்பிட்ட நீதிபதி, ஆராய்ச்சிகளுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் திறமை வாய்ந்த பலரை நாம் ஏற்கனவே இழந்து விட்டதாக வேனை தெரிவித்தார். உலக அளவில் மருத்து தயாரிப்பில் இந்தியா முன்னோடியாக இருந்து வந்ததாக குறிப்பிட்ட நீதிபதி, தற்போது மருத்துவ மூலப் பொருள்களுக்கு 90 சதவிகிதம் வரை அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளதால், தரம் குறைந்த மருந்துகளும் விற்பனைக்கு வருவதாக கவலை தெரிவித்தார்.

இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பது, தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி கிருபாகரன், மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒரே நாட்டை மட்டுமே நம்பியிருப்பது அண்டை நாட்டின் அத்துமீறலையும், பாதுகாப்பையும் திறமையாக சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்தார்.

Exit mobile version