இராணுவப் பயன்பாட்டிற்கு கார்பைன் ரக துப்பாக்கி – கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டம்

இந்திய ராணுவத்திற்கு உடனடியாக தேவைப்படும் கார்பைன் ரக துப்பாக்கிகளை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழும், வெளிநாடுகளிடமிருந்தும் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

குறைவான எடை, வேகமாக இயக்கக் கூடியத் தன்மை உள்ளிட்டப் பண்புகளால் போர்களத்தில் முன்வரிசை வீரர்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததாக கார்பைன் ரகத் துப்பாக்கிகள் உள்ளன. இந்திய ராணுவத்தில் இத்தகைய கார்பைன் ரக துப்பாக்கிகளின் தேவை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. முப்படைகளுக்கும் சேர்ந்து சுமார் மூன்றரை லட்சம் துப்பாக்கிகள் தேவைப்படுவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிகச் சில நாடுகள் மட்டுமே கார்பைன் துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதுடன் குறைந்த அளவே ஏற்றுமதி செய்கின்றன. 2008 ஆம் ஆண்டு முதலே கார்பைன் ரக துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய, ராணுவத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இசப்பூர் ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கார்பைன் ரகத் துப்பாக்கிகள் முதற்கட்ட சோதனையில் வெற்றிபெற்றுள்ளன. எனினும் போர்களத்தில் பயன்படுத்துவதற்கும் மேலும் பல கட்ட சோதனைகளுக்கு அவற்றை உட்படுத்த வேண்டியுள்ளது.

சீனாவுடன் மோதல்போக்கு அதிகரித்து வரும் வேளையில் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு சுமார் 94,000 கார்பைன் துப்பாக்கிகளை வெளிநாடுகளிடமிருந்து உடனடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் ராணுவத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இவ்வாறு முதற்கட்டமாக கொள்முதல் செய்யப்படும் துப்பாக்கிகள் சீன எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version