மதுரை, அலங்காநல்லூரில் வாட்ஸ்சப் குழு அமைத்து இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை குறிவைத்த ஒரு கும்பல், அவர்களின் செல்போன் எண்களை பெற்று, வாட்ஸ்சப் குழு அமைத்து கஞ்சா விநியோகம் செய்து வந்தது. வாட்ஸ்சப் குழு அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்…
இந்த நிலையில் வாட்ஸ்சப் குழு அமைக்கும் கடத்தல் கும்பலின் எண்ணை ரகசியமாக பெற்று கொண்ட போலீசார், அந்த குழுவில் ரகசியமாக இணைந்தனர். கஞ்சா வாங்கும் வாடிக்கையாளர் போல் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்ட போலீசார், எங்களுக்கு கஞ்சா வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு எதிர்முனையில் இருந்த கஞ்சா விற்பனையாளர்கள் வந்திருப்பது தங்களை வேட்டையாட போகும் போலீசார் என்று தெரியாமல், கஞ்சா விற்பனை செய்யும் வீட்டின் முகவரியை அனுப்பி வைத்து, நாங்கள் அனுப்பும் வீட்டின் முகவரிக்கு நீங்களே நேரடியாக வந்து பெற்றுகொள்ளுமாறு அவர்களிடம் கூறியுள்ளனர்.
கஞ்சா விற்பனை செய்யும் வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற போதை கும்பலை கையும் களவுமாக மடக்கிபிடித்தனர். பிடிப்பட்டவர்களில் மதுரை நல்லதம்பி பிள்ளை தெருவில் வசித்து வரும் 26 வயதான சித்ரா என்பதும் அவருக்கு துணையாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அருண் சூர்யா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்கும் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.