கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை!

சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனையும், மூவருக்கு மொத்தம் 24ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அமெரிக்காவில் இருந்து கொண்டு சவூதி அரேபிய அரசையும் பட்டத்து இளவரசரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதிஅரேபிய தூதரகத்துக்குச் சென்றவர் திரும்பவில்லை. இது குறித்த புகாரில் தூதரகத்தில் துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது. அவர் உடலைத் துண்டுதுண்டாக வெட்டி அமிலத்தில் கரைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. சவூதி அரேபிய பட்டத்து இளவரசரின் முகமது பின் சல்மானின் தூண்டுதலை அடுத்து அவரது ஆட்கள் கசோக்கியைக் கொன்றதும் அம்பலமானது. இது தொடர்பாக உலக நாடுகள் கொடுத்த நெருக்குதலை அடுத்து சவூதி அரேபியாவில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூவருக்கு மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version