ரத்த தானத்தில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது: முதலமைச்சர்

ரத்த தானத்தில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாக பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர், பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய தன்னார்வ ரத்த தான நாள், அக்டோபர் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரத்த தான நாள் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ்நாட்டு தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு, அரசு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் “மீம்ஸ் போட்டி” நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு தானமாக பெறப்படும் ரத்தத்தை சிறந்த முறையில் பாதுகாத்து பயன்படுத்தி வருவதை முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். ரத்த தானத்தில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதாக பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர், ரத்த தானத்தில் 100 விழுக்காடு இலக்கை எட்டிட பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version