பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி

பொருளாதார சிக்கலில் தள்ளாடும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி அமைப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் உதவி செய்ய முன் வந்துள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்…

தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடு என தொடர்ந்து குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம், அதிகப்படியான கடன் போன்றவற்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு அதிக நிதி உதவி செய்யும் நாடாக அமெரிக்கா இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு நிலைமை மாறி விட்டது. தாங்கள் கொடுக்கும் நிதிக்கு கணக்கு கேட்ட அமெரிக்கா, தனது நிதியை பாகிஸ்தான் வேறு பணிகளுக்கு திருப்பி விடுவதாக கூறி அனைத்து நிதிகளையும் நிறுத்தி விட்டது.

இதனால் பாகிஸ்தான் மிரண்டு போனது. ஏன் என்றால் பாகிஸ்தான் உலக வங்கிக்கும் சர்வதேச நிதி அமைப்புக்கும் கடனை திருப்பி செலுத்த வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக்கடன் 90 பில்லியன் டாலர்களை தாண்டிவிட்டது. வர்த்தக பற்றாக்குறை 20 பில்லியன் டாலராக உயர்ந்து விட்டது. வெளிநாட்டு கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு 12 பில்லியன் டாலரை பாகிஸ்தான் செலுத்த வேண்டியுள்ளதால் நிலை குலைந்து போனது.

இதையடுத்து நிதிக்காக சீனாவிடம் கெஞ்சியது பாகிஸ்தான். முதல் கட்டமாக கடந்த ஜூலை மாதம் சீனா, 14 ஆயிரத்து 500 கோடியை வழங்கியது. கடந்த நவம்பரில் சீனா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவுடன் 16 ஒப்பந்தங்களை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தங்களுக்கு பிறகு, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்க சீனா, மேலும் 17 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதி உதவி செய்ய ஒப்புக்கொண்டது.

முன்னதாக சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்தது. ஆனால் இந்த தொகை எல்லாம் தரிசுக்கு இறைத்த நீர் போல காணாமல் போனது தான் உண்மை.

பாகிஸ்தானின் அன்னிய செலாவணி வெறும் 57 ஆயிரத்து 560 கோடியாக குறைந்து விட்டது. இந்திய அன்னிய செலாவணியின் மதிப்பு 28 லட்சம் கோடியாக உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மாதங்களில் 35 சதவீத அளவுக்கு பாகிஸ்தானின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவிதத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில் பாகிஸ்தானின் வளர்ச்சி 5 புள்ளி 7 சதவீதமாகவே உள்ளது. ஒரு பக்கம் தீவிரவாத நடவடிக்கைகளால் சர்வதேச நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், பொருளாதாரத்தில் கை கொடுத்து தூக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு 42 ஆயிரம் கோடியை வழங்க முன் வந்துள்ளது. ஆனால் இந்த நிதி உதவி பாகிஸ்தானுக்கு உதவிகரமாக இருக்குமா? இந்த நிதியையும் தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் செலவழிக்குமா? என்பது இனிவருங்காலங்களில் தெரிந்து விடும்.

Exit mobile version