இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு

இந்தியப் பொருட்கள் எதையும் வாங்க மாட்டோம் என்று அறிவித்திருந்த பாகிஸ்தான், உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டதால், தற்போது போலியோ அடையாள மையை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய உள்ளது.

இந்தியாவில் அடையாள மை தயாரிப்புக்கு என்றே தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் அடையாள மைகள் நமது நாட்டிலும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான போலியோ அடையாள மையும் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண, அவர்களின் கை விரலில் வைக்கப்படும் அடையாள மையே ‘போலியோ அடையாள மை’ என அழைக்கப்படுகிறது.

குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத இந்த அடையாள மை இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு ஆகும். இது சாதாரண மார்க்கர் ஸ்கெட்சின் வடிவத்தில் இருக்கும். இதையும் பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளில் பாகிஸ்தானும் அடக்கம்.

கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், பின்விளைவுகளை சிந்திக்காமல் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இதனால் ஒரு பக்கம் பாகிஸ்தானில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன.

இன்னொரு பக்கம், பாகிஸ்தான் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகளும், மருந்து மூலப் பொருட்களும் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதால் பாகிஸ்தானில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தன. இதனையடுத்து இந்தியாவில் இருந்து உயிர்காக்கும் மருந்துகளையும் அவற்றின் மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு விலக்கு அளித்து, கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், போலியோ அடையாள மை அடங்கிய 8 லட்சம் மார்க்கர்கள் அடுத்த ஆண்டில் தேவை என பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்ததுடன், அவற்றை இந்தியாவிடம் இருந்து வாங்க இருந்த தடையை தளர்த்தும்படியும் கேட்டுக் கொண்டது. இதனையடுத்து போலியோ அடையாள மை மார்க்கர்களை இந்த ஒருமுறை வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாகிஸ்தான் விதித்த தடைகள் தொடர்ந்து பாகிஸ்தானுக்கே தலைகுனிவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version