சின்ன ஏழாச்சேரியில் விதிமுறைகளை மீறிச் செயல்படும் கல் குவாரி !

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சின்னஏழாச்சேரி என்ற பகுதியில் ஏழுமலை மற்றும் சீனிவாசன் ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த, உத்திரமேரூர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் நந்தகுமார், பகுதிநேரமாக லாரி ஓட்டுநராகப் பணி செய்து வந்துள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி வேலைக்கு சென்ற நந்தகுமார், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வரவே அவரது பெற்றோர் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர் நந்தகுமார் லாரி ஓட்டிவரும்போது எதிரே வந்த லாரி மோதி உயிரிழந்ததாக தூசி காவல்நிலையத்தில் கல்குவாரி உரிமையாளர் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் விதிமீறி செயல்படும் கல்குவாரியில் 300 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில்தான் மாணவர் நந்தகுமார் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். கற்களை லாரியில் கொண்டு சென்றபோது, தலைக்குப்புற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், கல்குவாரி விபத்தை சாலை விபத்து என்று உண்மையை மறைத்து போலியாக பதிவு செய்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணையில் கல்குவாரிக்குள் விபத்து நிகழ்ந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து குவாரி உரிமையாளர்களான ஏழுமலை மற்றும் சீனிவாசனையும், தனது லாரியில் சிக்கித்தான் நந்தகுமார் உயிரிழந்ததாக தெரிவித்த மற்றொரு லாரி ஓட்டுநர் அருளையும் கைது செய்த போலீசார், விபத்துக்குள்ளான லாரியின் உரிமையாளர் கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

சீனிவாசன் மற்றும் ஏழுமலை நடத்தும் கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தை விட அதிக அளவில் ஆழம் தோண்டி கற்களை வெட்டி அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆளும் கட்சியினரின் ஒத்துழைப்போடு இந்த விதிமீறல் நடப்பதால், கனிமவளத்துறையும் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். தற்போது கைதானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தும் அப்பகுதியினர், உயிரிழந்த மாணவர் நந்தகுமாரின் குடும்பத்தின் வாழ்வாதாரம் காக்க அரசு நிவாரண நிதி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version