மதுபாட்டிலால் மனைவியை 15 இடங்களில் குத்திய கணவன்

குடும்பத் தகராறில், மது பாட்டிலால் மனைவியின் உடம்பில் 15 இடங்களில் சரமாரியாக குத்திய கணவனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை முகப்பேரில் வசித்து வரும் குமரன், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குமரனை விட்டுப் பிரிந்த அவரது மனைவி காமாட்சி, தனியாக வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், மது போதையில் மனைவியைக் காண அவரது வீட்டிற்கு குமரன் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த காமாட்சியைத் தன்னுடன் வருமாறு அழைக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, குமரன் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் காமாட்சியை 15 இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் காமாட்சியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததோடு, தப்பியோடிய குமரனை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version