முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்குப் பாடுபடப்போவதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிபின் ராவத் டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நராவனே, விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங், கடற்படைத் தளபதி கரம்பீர்சிங் மற்றும் மூத்த அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். அதன்பின் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், முப்படைகளும் இணைந்து செயல்படுவதற்குத் தான் பாடுபடப் போவதாகத் தெரிவித்தார். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் குறித்துத் தான் கருத்துத் தெரிவித்ததில் எந்த அரசியலும் இல்லை எனவும், அரசியலில் இருந்து தான் எப்போதும் ஒதுங்கியே இருப்பதாகவும் தெரிவித்தார். அரசின் அறிவுறுத்தலின்படி தன்னுடைய பணி அமையும் எனவும் பிபின் ராவத் குறிப்பிட்டார்.