சிறுவயதில் சிகிச்சைக்கு கஷ்டப்பட்டேன் – அந்த அனுபவத்தால் தான் இப்போது அம்மா மினி கிளினிக் திட்டம்

சேலம் மாவட்டத்தில் ஏ.வாணியம்பாடி மற்றும் முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் 100 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக 34 மினி கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே கொண்டலாம்பட்டி மற்றும் லத்துவாடி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிலையில், பனமரத்துப்பட்டி அருகே ஏ.வாணியம்பாடி பகுதியில் புதிய அம்மா மினி கிளினிக்கை, முதலமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குத்து விளக்கேற்றி அம்மா மினி கிளினிக்கின் செயல்பாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர், மினி கிளினிக்கில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறுவதாகவும், கொரோனா காலத்திலும் மக்களிடம் நேரடியாக சென்று ஆய்வு செய்து, தொற்று தடுப்பு பணிகளில் அதிமுக அரசு ஈடுபட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.

பின்னர் ஓமலூர் ஒன்றியத்துக்கு சென்ற முதலமைச்சர், முத்துநாயக்கன்பட்டியில் உள்ள அம்மா மினி கிளினிக்கை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், சிறுவயதில் தனக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் இருந்த சிரமத்தை சுட்டிக்காட்டி, அதை போக்கும் நோக்கில் தற்போது அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்து அனைவருக்கும் சிகிச்சை கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக முத்துநாயக்கன்பட்டிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் சூழ்ந்திருந்த பொதுமக்களை பார்த்து காரில் இருந்தவாறு முதலமைச்சர் கையை அசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

Exit mobile version