சேலத்தில் விவாகரத்து பெற முயன்ற மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய சம்பவத்தில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த கணவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. 50 வயதாகும் இவருக்கும் ஏழுதாஸ் என்பவருடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏசுதாஸ் மாநகராட்சியில் மருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இதனிடையே ஏசுதாஸ் 50 வயதாகும் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சித்திரவதை செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரேவதி 3 மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஏசுதாஸின் அத்துமீறல் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது ரேவதி கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எண்றும் விவகாரத்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஏசுதாஸ் ஊருக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் தாயுடன் நின்று கொண்டிருந்த ரேவதியை கடுமையாக தாக்கியுள்ளார்.
பின் கேனில் எடுத்து வந்திருந்த ஆசிட்டை எடுத்து ரேவதியின் உச்சி முதல் கால் வரை ஊற்றி விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
அருகில் நின்றிருந்த தாயின் கையிலும் ஆசிட் தெறித்தது. இதனைக் கண்டு அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆசிட் ஊற்றியதால் உடல் வெந்த நிலையில் ரேவதி கூச்சலிட்ட படி பேருந்து நிலையத்திற்குள் அங்கும் இங்கும் ஓடினார்.
ரேவதி அனுபவிக்கும் சித்திரவதையை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரையும் அவரது தாயையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
70 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஏசுதாஸை கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு 50 வயது மனைவி மீது 60 வயது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.