உலகெங்கும் ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக கூகுளின் ஆண்ட்ராய்டு உள்ளது. ஆப்பிள் போன்களைத் தவிர்த்து பிற அனைத்து ஸ்மார்ட் போன்களும் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் இயங்குகின்றன. ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான சீனாவின் வாவே நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களும் ஆண்ட்ராய்டு தளத்தைத்தான் பயன்படுத்தி வந்தன.
இந்நிலையில் அமெரிக்க-சீன வர்த்தகப் போர் தீவிரமடைந்ததால், இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அதிரடி அறிப்பை வெளியிட்டார். ‘அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது’ என்ற தடை தான் அந்த அறிவிப்பு. இதனால் அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் தயாரிக்கும் ஆண்ட்ராய்டை சீனாவின் வாவே நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் டிரம்ப் இந்த தடையை விலக்கினார் என்றாலும், அமெரிக்க நிறுவனத்தின் இயங்கு தளத்தை மட்டுமே நம்பியிருந்தால் தங்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி வாவே நிறுவனத்தின் முன்பு எழும்பியது. இதனால் வெறும் இரண்டே மாதங்களில் கடினமாக உழைத்து ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக ஒரு புதிய இயங்குதளத்தையே உருவாக்கி உள்ளது ‘வாவே’. ஹார்மனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம், சீனாவின் டங்குவான் நகரத்தில் நடைபெற்ற மென் பொறியாளர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டைப் போலவே ஓபன் சோர்ஸ் இயங்குதளமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த ஹார்மனியை யார் வேண்டுமானாலும் தங்கள் கைபேசியில் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். கைபேசிகள் தவிர ஸ்மார்ட் டிவிக்கள், ஸ்மார்ட் வாட்சுகள், வாகனங்கள் போன்றவற்றிலும் இதைப் பயன்படுத்த முடியும்.
ஹார்மனியின் வருகையால், இது வரை ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனியொருவனாக ஆட்சி செய்து வந்த கூகுளுக்கு ஒரு மாற்று கிடைத்து உள்ளது. தற்போது வாவேவின் கைபேசிகளில் ஆண்ட்ராய்டோடு ஹார்மனிக்கும் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது, ஒருவேளை எதிர்காலத்தில் அமெரிக்க-சீன வர்த்தக யுத்தம் மேலும் தீவிரமடைந்தால் வாவே உள்ளிட்ட சீன நிறுவனங்கள் ஒரேயடியாக ஆண்ட்ராய்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ஹார்மனியின் பக்கம் தாவும். இப்போதே சீன மக்கள் ஹார்மனிக்கு வேகமாக மாறத் தொடங்கி உள்ளனர்.
வர்த்தகப் போரில் அமெரிக்கா இனி எந்த சீன நிறுவனத்தையும் பகைத்துக் கொள்ளும் முன்னர் கட்டாயம் யோசிக்க வேண்டிய நெருக்கடியை ஹார்மனி இயங்குதளத்தின் வருகை ஏற்படுத்தி உள்ளது.