மனைவியின் வரம்பு மீறிய உறவு – "கள்ளக்காதலனை கொன்று கம்பி எண்ணும் கணவன்"

ஓசூர் அருகே, வரம்பு மீறிய 2வது மனைவியை தடுக்க முடியாமல், மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவர், நண்பனோடு சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். மது விருந்து வைத்து சம்பவம் செய்தவர்கள் சிக்கிய கதை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள N.B.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர், 51 வயதான லட்சுமணன். வாகன ஓட்டுநரான இவருக்கு, மனைவி, குழந்தைகள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன் இவரது தம்பி இறந்த நிலையில், தம்பியின் மனைவி காவேரிக்கு அன்பு அணைகட்டி, வெங்கடேஷ் நகர் பகுதியில் குடியமர்த்தி, திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இப்படி இரட்டை வாகன சவாரி செய்துவந்த லட்சுமணனின் வாழ்க்கைப் பாதையில், மேஸ்திரி சதீஷ் என்னும் வேகத் தடை விழுந்துள்ளது. கட்டிடப் பணியில் சித்தாள் வேலை பார்க்கும் 40 வயதாகும் காவேரிக்கும், 32வயது மேஸ்திரி சதீஷுக்கும் இடையே, டைல்ஸ் ஒட்ட ஊற்றிய சிமெண்ட் பாலாய் இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டுள்ளது.

மேஸ்திரியும், சித்தாளுமாய் இருந்தவர்களுக்குள் பரவிய பிணைப்பு, வரம்பு மீறிய உறவாகி விட, இருவரும் பல்வேறு பகுதிகளுக்கும் இன்பச் சுற்றுலா சென்று, உறவுப் பிணைப்பை பலப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காவேரியின் நவீன ஆனந்த தாண்டவத்தைக் கேள்விப்பட்டு, காண்டான லட்சுமணன், சதீஷுடனான பழக்கத்தை கைவிடக் கூறி, பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், அணை தாண்டிய காவேரியோ, இதனைக் கண்டுகொள்ளவில்லை.

மேலும், சதீஷிடமே இது குறித்தும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சதீஷ் நேரடியாகவே லட்சுமணனிடம், உன்னால் முடிந்தால் எங்களைப் பிரித்துப் பார் என்று சவால் விட, இருவருக்குள்ளும் யுத்தம் தொடங்கியுள்ளது.

எப்படியாவது சதீஷை வீழ்த்தவேண்டும் என்று டாப் கியர் போட்ட லட்சுமணன், அங்குள்ள சமத்துவபுரத்தில் வசிக்கும் குடும்ப நண்பரான மேஸ்திரி மகேந்திரனை சந்தித்துள்ளார். தொழில் ரீதியாக சதீஷ் பழக்கமான நபர் என்பதால், லட்சுமணனுக்கு கைகொடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.

இதையடுத்து மது விருந்து தருவதாக மகேந்திரன் அழைத்ததை ஏற்று, கோகுல்நகர் பகுதிக்கு வந்த சதீஷ், அங்கு லட்சுமணன், மகேந்திரன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, காவேரி பிரச்னையை எடுத்துப் பேசி, திட்டமிட்டபடி லட்சுமணன் தகராறு செய்ய, மகேந்திரன் சதீஷை பிடித்துக்கொண்டார்.

இதையடுத்து, லட்சுமணன் மதுபாட்டிலால் சதீஷின் கழுத்திலும், மற்ற பகுதிகளிலும் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த சதீஷ், அங்கேயே உயிரிழந்துள்ளார். இருவரும் அங்கிருந்து சென்ற நிலையில், கொலை குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், சதீஷின் சடலத்தைக் கைப்பற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை நடத்தியதில், கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வர, லட்சுமணன், மகேந்திரன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Exit mobile version