அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதி, தெற்கு கேரளா, குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நள்ளிரவில் சென்னையில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.