நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மார்ச் 27ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மார்ச் 27ம் தேதி முதல் www.nta.ac.in, www.ntaneet.nic.in இணையதளங்களில் பதவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற 11 மொழிகளில் நடைபெறவுள்ளன. தமிழகத்தில், சென்னை, கோவை கடலூர் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் தேர்வுகள் நடைபெறவுள்ளன.